Saturday, June 13, 2009

உலக தந்தையர் தினம் - (21/06/2009) திருத்தபட்ட பதிவு

உலக தந்தையர் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் வருகின்ற மூன்றாவது ஞாயிற்றுக் கிழமையில் கொண்டாடப்பட்டு வருகின்றது. இம்முறையும் ஜுன் 21நாள் கொண்டாடப்பட இருக்கிறது. அன்னையர் தினத்துக்கு கொடுக்கபடுகிற அளவு முக்கியத்துவம் தந்தையர் தினத்துக்கு கொடுக்கப்படுகிறதா என்றால் இல்லை, அதாவது பரவாயில்லை காதலர் தினத்தை கொண்டாட துடிக்கிற இளைஞர்கள் தம்மை தோளில் தூக்கி வளர்த்த தந்தையை மறந்து விடுகிறார்கள்.

தந்தை மகற்காற்று நன்றி
அவையத்து முந்தி இருப்பச் செயல். (குறள்)

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல். (குறள்)

என்கிற வள்ளுவர் வாக்கிற்கு இணங்க ஒவ்வொரு மகனும் தந்தையும் செயற்படின் வையத்துள் வாழ்வது செழிப்புறும்.


தாயிட் சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை

மந்திரம் உச்சரிக்கபடுகிற போது தான் கோவில் புனித தன்மை பெறுகிறது நமது வேண்டுதலும் நிறைவேறுகிறது. அதேபோல, எமது தந்தையின் சொற்படி கேட்டு ஒவ்வொரு செயலும் செய்வோமானால் அதில் ஒரு பூரணதன்மையை உணரமுடியும்.

தந்தையின் பெருமையினை உணர ஒரு குட்டிக் கதை:

ஒரு நாள் ஒரு வயோதிப தந்தையும் இளவயது நிரம்பிய மகனும் வரவேற்பறையில் அமர்த்திருக்கிறார்கள். மகன் பத்திரிகை படித்துகொண்டிருக்கிறான். அப்பொழுது தந்தை அருகிலிருந்த தொலைகாட்சிபெட்டியை காண்பித்து இது என்ன மகனே என்று கேட்கிறார்? அதற்கு மகன் அதுதான் தொலைகாட்சிபெட்டி(TV) என்று பதிலளித்துவிட்டு மீண்டும் பத்திரிகை படிக்கிறான். சிறிது நேரத்திற்கு பின்னர் தகப்பனார் அதே கேள்வியை கேட்க, மகனோ சலிப்புற்றவனாய் "இப்பொழுது தானே சொன்னேன் அது தொலைகாட்சிபெட்டி(TV) என்று" என சற்று உரத்த குரலில் பதிலளித்துவிட்டு மீண்டும் பத்திரிகையில் மூழ்குகிறான். பொறுமையாக புன்முறுவலுடன் மகனை நோக்கிய தந்தை சற்று நேரம் கழித்து சற்றே தயங்கியவாறு மீண்டும் அதே கேள்வியை கேட்கிறார். மகனோ பொறுமை இழந்தவனாய் "எத்தனை முறை சொல்வது? ஒரு தடவை சொன்னால் புரியாதா?" என்றவாறு சினந்து தள்ளுகிறான். மீண்டும் எதையுமே காதில் வாங்கிக் கொள்ளாதவாறு மகனை பார்த்து புன்னகைத்துவிட்டு , மகனே உனக்கு நான்கு(04) வயதாக இருந்த்தபோது இதே கேள்வியை என்னிடம் நூறு தடவைக்கு மேல் கேட்டிருப்பாய் நானும் அத்தனை தடவையும் ஒரே பதிலை சலிக்காமல் சொல்லிகொண்டே இருப்பேன். நான் பதில் சொல்லாமல் இருந்தால் நீ அழ ஆரம்பித்து விடுவாய். இப்பொழுது மூன்று முறை பதில் சொல்வதற்கே உன்னால் முடியவில்லை. என்று சொன்னார் மீண்டும் புன்னகைத்தபடி.

இதே போலவே நாமும் முன்னாளில் தாய், தந்தையர் நமக்காக செய்த நற்காரியங்களை காலபோக்கில் மறந்து விடுகிறோம் அல்லது அறியாமலே இருந்துவிடுகிறோம்.

காதலர் தினத்துக்காக எவ்வளவோ முன் ஆயத்தங்கள் செய்கிற நாம். அன்று எம்மை தோளில் தூக்கி வளர்த்த தந்தைக்காக ஏன் தந்தையர் தினத்தை கொண்டாட மறந்து விடுகிறோம்?

எனவே நாம் ஒவ்வொருவரும் இன்நாளில் தந்தையின் பெருமைகளை நினைத்து கொண்டாடி மகிழ்வோம்.

மீண்டும் சந்திக்கும் வரை ....!
நன்றிகளோடு நண்பன் - யுகன் -